கடந்த சில நாட்களாகவே, நீதியைத்தேடி(டும்)… வாசகர்கள் சிலர் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் கோட்டை முதல் குமரி வரை நீதியைத்தேடி…. அல்லது நீங்களே வாதாடலாம் அல்லது நீங்களே வாதாட வழிகாட்டுதல் என்கிற பெயரில் ஆங்காங்கே நடத்தப்படும் சட்டப்பயிற்சி வகுப்புகள் குறித்தும், அத்தோடு எங்களுக்குள்ள தொடர்புகள் குறித்தும், அங்கு உங்களது நூல்கள் விற்பனைக்கு கிடைக்குமா என்றும் கேட்டு வருகிறார்களாம்.

நாங்கள் அப்படி எதுவும் தற்போது நடத்தவில்லை என்று தெரிவித்த போது, நீதியைத்தேடி… நூல்களில் குறிப்பிட்டுள்ள சிலரே, அப்பயிற்சி வகுப்புகளை முன்னின்று நடத்துவதால், தங்களது வழிகாட்டுதலில்தான் அப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள் என நினைத்தோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் இவர்களுக்கெல்லாம் சட்டப்பயிற்சி வகுப்பெடுத்தேன் என்பதும், அவர்களின் ஓரிரு சட்டச் சாதனைகள் குறித்து நீதியைத்தேடி… நூல்களில் எழுதியிருக்கிறேன் என்பதும் உண்மைதான்.

இதனாலேயே, அவர்கள் எனது வழிகாட்டுதலில்தான் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள் என நினைப்பது, முற்றிலும் தவறு!

ஆமாம், 2000 ஆம் ஆண்டு சட்ட ஆராய்ச்சியை தொடங்கிய நான், 2010 ஆம் ஆண்டு அதனை முடிக்க இருக்கிறேன் என 2008 ஆம் ஆண்டு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்த நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில், நான் பகிரங்கமாக அறிவித்தப் பின்னர், கிளம்பிய வாசகக் கூட்டமிது. அன்று ஒன்றாக இருந்த இக்கூட்டம், இன்று பலவாகவும், பல்வேறு பெயர்களிலும் பிரிந்து கிடக்கிறது.

இது தெரியாமல், தெரிந்தும் இதன் பின்னால் போனால் என்னவாகும் எனப் புரியாமல், என்னுடன் தொடர்பில் இருந்த வாசகர்கள் சிலரே இக்கூட்டத்தின் பின்னால் சென்று, பல விதத்திலும் பட்டுத் தெளிந்தப்பின், அவைகுறித்த வாக்குமூலங்களை எனக்கு அளித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும், நான் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்தியதே, ஆராய்ச்சியுடன் கூடிய அனுபவ நூல்களை எழுத வேண்டும் என்பதற்காகத்தான் என்கிற வகையில், அந்நூல்களை எழுதி, பொதுவுடைமை என அறிவித்து விட்டேன்.

ஆனால், இச்சட்டப் பயிற்சி வகுப்புகளில், அப்பொதுவுடைமை நீதியைத்தேடி… நூல்கள் கிடைக்காது. ஆனால், மதிப்புள்ளவை மட்டுமே திருடப்படும் என்கிற வகையில், இந்நூல்களின் கருத்துக்கள், அவரவர்களது ஆராய்ச்சிக் கருத்துக்களாக கிடைக்கும். அவ்வளவே!

அப்படியானால், ‘எங்களுக்கான உங்களது சட்டப்பயிற்சி வகுப்பு’ என கேட்பவர்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான்.

நீதியைத்தேடி… நூல்களை முதல் நூலில் இருந்து வரிசையாக படியுங்கள். தெளிவாக புரியும். ஏனெனில், அந்நூலை நான் எனக்காகவோ அல்லது எனக்கிருக்கும் சட்ட அறிவு (எ, இ)வ்வளவு என்பதை வெளிப்படுத்துவதற்காகவோ எழுதவில்லை.

உங்கள் ஒவ்வொருவருக்காகவுமே எழுதியுள்ளேன். அதனால்தான், அதனை சமுதாயத்தின் சொத்தாகபொதுவுடைமை எனவும் அறிவித்துள்ளேன்.

இந்நூல்கள் ‘‘கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் அன்று. சமைக்கத் தேவையான சுரைக்காயே, ஏடாகவும், எழுத்தாகவும், எழுதுதுக்கள் பேச்சாகவும் இருக்கிறது’’என்பதை படிக்கப்படிக்க நன்கு உணர்வீர்கள்.

இதனை உணர்ந்து வாதாடி, யாருடைய வழிகாட்டுதலம், பயிற்சியும் இல்லாமல் வாதாடி, நியாயத்தைப் பெற்றவர்கள் பலர் என்றால், தினமணி, தீக்கதிர், துக்ளக், விடுதலை, உண்மைஉட்பட எத்தனையோ இதழ்கள், இதனைக் குறிப்பிட்டே மதிப்புரைகள் எழுதியுள்ளன. இவைகள் அந்தந்த மறுபதிப்பு நூலிலும் தொகுக்கப் பட்டுள்ளன.

இதற்கு மேலும், புரியாத பகுதி எதுவும் இருந்தால், என்னிடம் கேளுங்கள். விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுவரை கேட்டவர்கள்தான் யாருமில்லை.

அக்கறையுள்ளவர்கள் இப்பதிவை தேவையான இடங்களில் பதிவிடுங்கள் அல்லது பயன்படுத்துங்கள். விழிப்பறிவுணர்வை ஊட்டுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book